காற்று தரத்தை மேம்படுத்த 270 மின்சார மோட்டார் சைக்கிள்கள்
ரூ.4 கோடி செலவில் காற்று தரத்தை மேம்படுத்த 270 மின்சார மோட்டார் சைக்கிளை மாநகராட்சி முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு;-
பெங்களூருவுக்கு பூங்கா நகரம் என்ற சிறப்பு பெயர் உண்டு. அந்த பெயருக்கு ஏற்றதுபோல் நகர் முழுவதும் பலவகை மரங்கள் உள்ளன. வளர்ச்சி பணிகள் போன்ற காரணங்களுக்காக ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பெங்களூருவில் காற்று மாசு ஏற்பட தொடங்கி உள்ளது. நெருக்கடியான நகரில் வாகன போக்குவரத்தால் ஒரு பக்கம் காற்று மாசு அடைகிறது. இந்த நிலையில் காற்று மாசுவை குறைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் காற்று தரத்தை உயர்த்துவதற்காகவும், மாசு ஏற்படாமல் தடுக்கவும் 270 மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும், ஒரு மோட்டார் சைக்கிள் என்ற முறையில் வாங்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை அதிகாரி கூறுகையில், 'பெங்களூருவில் மாசு ஏற்படுவதை குறைக்கும் நோக்கில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் தீவிபத்து ஏற்படும் இடங்களுக்கு மார்ஷல்கள் விரைவாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும், சாலைகளில் ரோந்து சென்று, குப்பை கழிவுகளை சாலைகளில் வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஜனவரி வரை சாலைகளில் குப்பை கழிவுகளை வீசியதாக பொதுமக்களிடம் இருந்து ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது' என்றார்.