2ஜி அலைக்கற்றை ஊழல்: சிபிஐ, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
2ஜி அலைக்கற்றை ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி ஐகோர்ட்டி உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது.
இந்த ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு கோர்ட்டில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி தினேஷ் குமார் சர்மா உத்தரவிட்டார். பதில் மனுக்கள் 5 பக்கங்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணைமே 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.