ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு; குமாரசாமி சொல்கிறார்
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று குமாரசாமி சொல்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சி முன்கூட்டியே தங்களது முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் பா.ஜனதா இன்னும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஏற்கனவே 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஜனதாதளம்(எஸ்) கட்சி அறிவித்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 2-ம் கட்டமாக 131 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இது குறித்து ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் வருகிற மே மாதம் 10-ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் நாங்கள் ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்விட்டோம். 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (அதாவது, இன்று) ஹாசனில் வைத்து வெளியிடப்படுகிறது. கட்சிக்காக உழைத்தவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் உள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள், மன வருத்தம் அடைய கூடாது. தொடர்ந்து கட்சிக்காக உழைக்கவேண்டும். ஏற்கனவே ஜனதா தளம் (எஸ்) பஞ்சரத்னா யாத்திரை முடிந்துவிட்டது. இனி தேர்தல் பிரசாரம்தான்.
அதன்படி வருகிற 12-ந் தேதி வரை சாம்ராஜ்நகர், மைசூரு, பல்லாரி, உப்பள்ளி, தார்வார் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறேன். இதையடுத்து 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தேர்தல் வேட்புமனுதாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்கள் ஈடுபடுவார்கள். இதையடுத்து வருகிற 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ராமநகர், சென்னப்பட்டணா, கனக்கபுரா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறேன். இந்த முறை ஜனதாதளம் (எஸ்) கட்சி கூடுதல் இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும். தேர்தல் கருத்து கணிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.