தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவருக்கு 3 மாதம் சிறை; ரூ.4½ லட்சம் அபராதம்


தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் குறித்து   அவதூறு கருத்து பதிவிட்டவருக்கு 3 மாதம் சிறை; ரூ.4½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்து பெல்தங்கடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மங்களூரு: தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்து பெல்தங்கடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தர்மஸ்தலா கோவில்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் பிரசித்திபெற்ற தர்மஸ்தலா கோவில் உள்ளது. இந்த கோவிலின் தர்மாதிகாரியாக வீரேந்திர ஹெக்டே இருந்து வருகிறார். இந்த நிலையில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே மற்றும் கோவில் நிர்வாகம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை ஒருவர் பதிவிட்டார். அந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவ்வாறு கருத்து பதிவிட்டது நாகரீக சேவா அறக்கட்டளையின் தலைவர் சோமநாத நாயக் என்பது தெரியவந்தது.

சிறைத்தண்டனை

இதையடுத்து சோமநாத நாயக்கை கைது செய்யக்கூறி கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சோமநாத நாயக் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டும் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சோமநாத நாயக்கை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் அவர் பெல்தங்கடி தாலுகா கோர்ட்டில் நீதிபதி விஜயேந்திரா முன்பு சரண் அடைந்தார். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயேந்திரா, சோமநாத நாயக்கிற்கு 3 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.4.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சோமநாத நாயக் கோர்ட்டுக்கு வந்தபோது முன்னாள் எம்.எல்.ஏ. வசந்த் பங்கேரா உள்பட 70-க்கும் மேற்பட்டோர் அவருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறையில் அடைப்பு

முன்னதாக கோர்ட்டில் அபராத தொகையை செலுத்த 90 நாட்கள் கால அவகாசம் கோரி சோமநாத நாயக்கின் வக்கீல் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சோமநாத நாயக் மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story