ரூ.16 லட்சம் பான்மசாலாவை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
கன்டெய்னர் லாரி டிரைவரை தாக்கி ரூ.16 லட்சம் பான்மசாலாவை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கமகளூரு;
பான் மசாலா..
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா பரமசாகரா அருகே கொல்லரஹட்டி கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், கன்டெய்னர் லாரியை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் லாரி டிரைவர் ராகேசை கீழே இறக்கி சரமாரியாக தாக்கினார்கள். இதையடுத்து டிரைவர் ராகேசின் கை, கால்களை கட்டி போட்டு, கன்டெய்னரில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான பான் மசாலாவை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த டிரைவர் ராகேசை மீட்டனர். அப்போது மர்மநபர்கள் கன்டெய்னரில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான பான் மசாலாைவ திருடி சென்றது தெரியவந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து பரமசாகரா போலீசில் லாரி டிரைவர் ராகேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் லாரி டிரைவரை தாக்கி பான்மசாலாவை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் கொப்பலை சேர்ந்த கங்காதர், மாதர்ஷாப், அண்ணப்பா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான பான் மசாலா மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.