திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது- சிறையில் வாலிபர்களுக்கு பயிற்சி அளித்தது அம்பலம்
திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது- சிறையில் வாலிபர்களுக்கு பயிற்சி அளித்தது அம்பலமானது.
பெங்களூரு: பெங்களூரு ஜே.ஜே.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீடுகளில் திருடி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் துமகூருவை சேர்ந்த ரக்சித் (வயது 21), சித்தராஜ் (20) மற்றும் பெங்களூரு கோனனகுன்டேயை சேர்ந்த அஜ்சுதகுமார் (35) என்று தெரிந்தது. இவர்களில் அஜ்சுதகுமார் பிரபல திருடன் ஆவார். முதலில் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பெங்களூருவில் உள்ள வீடு, கடைகளில் திருடி வந்தார். இந்த திருட்டு வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை, ஞானபாரதி போலீசார் 2 கால்களிலும் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருந்தார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அஜ்சுதகுமாருக்கு, ரக்சித், சித்தராஜுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் வைத்தே 2 பேருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் எப்படி திருட வேண்டும் என்பது குறித்து அஜ்சுதகுமார் தொடர்ந்து பயிற்சி அளித்து வந்துள்ளார். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த 3 பேரும் மீண்டும் வீடுகளில் நகை, பணத்தை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான 30 கிராம் நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.