சித்ரதுர்காவில் லாரி-கார் மோதி விபத்து: தம்பதி உள்பட 3 பேர் சாவு
லாரி-கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள்.
சிக்கமகளூரு: சித்ரதுர்கா-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சித்ரதுர்கா அருகே சிபாரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரும், எதிரே வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் லாரியில் மோதிய வேகத்தில் கார் பல்டி அடித்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த முனீஸ் (வயது 27), அவரது மனைவி சின்சனா (24), மைத்துனி பூமிகா (22) என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் கிரிதர், ஆஷா என்பதும் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.