பல ஆண்டாக பணிக்கு வராத 3 போலீசார் பணி இடைநீக்கம்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
தார்வாரில் பல ஆண்டாக பணிக்கு வராத 3 போலீசார் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டத்தில் உள்ள சி.ஏ.ஆர். அலுவலகத்தில் போலீசாராக பணியாற்றி வருபவர்கள் சென்னபசவா, மைலாரா. இதேபோல் சிவில் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சந்தோஷ் பங்கி. இவர்கள் 3 பேரும் கடந்த பல ஆண்டுகளாக போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு வரவில்லை.
இதனால் வருகை பதிவேட்டில் அவர்கள், என்ன காரணத்திற்காக வரவில்லை என்பதை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகேசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனே துறை ரீதியாக விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள் 3 பேரும் என்ன ஆனார்கள், எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவர்களை பணி இடைநீக்கம் செய்யும்படி போலீசார் தரப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ், 3 போலீஸ்காரர்களையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.