மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் 3 பேர் பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் 3 பேர் பலி
x

டி.நரசிப்புரா அருகே, விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு:

விவசாய கூலி தொழிலாளிகள்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா நிலஷோகே கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 32). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேகவுடா(60), அவரது மகன் மகாதேவசாமி(38) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

அதை கவனிக்காமல் 3 பேரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராஜேகவுடா அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் துடிதுடித்தார்.

3 பேர் பலி

இதனால் பதற்றம் அடைந்த மகாதேவசாமி மற்றும் ஹரீஷ் ஆகியோர் ராஜேகவுடாவை காப்பாற்ற முயன்றனர். அப்போது 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுபற்றி அவர்கள் டி.நரசிப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் செஸ்காம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து முதலில் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

அலட்சியமே காரணம்

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹரீஷ் உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே ராஜேகவுடா உள்ளிட்ட 3 பேரும் பலியானதற்கு செஸ்காம் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story