போலி டாக்டருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை


போலி டாக்டருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் போலி டாக்டருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்த்தஹள்ளி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளார்.

சிவமொக்கா:-

போலி ஆவணங்கள்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகாவை சேர்ந்தவர் சஞ்ஜீவ் ஷெட்டி (வயது 40). டாக்டர் ஆவார். இவர் கோணந்தூரு-எம்.கே. சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் அந்த பகுதியில் சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வந்தார். இந்த நிலையில் சஞ்ஜீவ் ஷெட்டி முறையாக டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநல அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும், சஞ்ஜீவ் ஷெட்டியிடம் உள்ள கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரிந்தது. மேலும், அவர் டாக்டருக்கு படிக்காமலேயே கிளினிக் நடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து இதுதொடர்பாக தீர்த்தஹள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் சஞ்ஜீவ் ஷெட்டியை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தீர்த்தஹள்ளி கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இதற்கிடையே போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் சார்பில் அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி, முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் போலியான ஆவணங்களை சமர்பித்து சிகிச்சை அளித்து வந்தது உறுதியாகி உள்ளது.

எனவே மோசடியில் ஈடுபட்ட அஸ்வினி கிளினிக் உரிமையாளரான சஞ்ஜீவ் ஷெட்டிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும், 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதுமட்டுமல்லாது மாவட்டத்தில் போலியாக சுற்றித்திரியும் டாக்டர்கள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார துறை மற்றும் போலீசாருக்கு பரிந்துரை செய்தார்.


Next Story