கோரமங்களா வெளிவட்டச்சாலை மேம்பால திட்டத்திற்கு ரூ.307 கோடி நிதி- கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு


கோரமங்களா வெளிவட்டச்சாலை மேம்பால திட்டத்திற்கு ரூ.307 கோடி நிதி- கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
x

பெங்களூரு கோரமங்களா வெளிவட்டச்சாலை மேம்பால திட்டத்திற்கு ரூ.307 கோடி நிதி ஒதுக்க கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

சக்தி திட்டம்

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 162 பேர் பி.எட். முடிக்காமல் உள்ளனர். அவர்கள் பி.எட். படிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் சக்தி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடிவு செய்யப்பட்டது. முதலில் 3 மாதங்கள் அந்த கார்டு இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கோரமங்களா மேம்பாலம்

இதை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 'ஸ்மார்ட் கார்டு' இல்லாமல் அரசு பஸ்களில் பயணிக்கலாம். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர போக்குரத்து கழகத்திற்கு 320 பஸ்கள் வாங்கப்படும். ரூ.100 கோடியில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு 250 பஸ்கள் வாங்கப்படும். வறட்சி பகுதிகள் குறித்து மந்திரிசபை துணை குழுவிடம் அறிக்கை கேட்டுள்ளோம்.

அந்த அறிக்கை கிடைத்ததும் வறட்சி பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். வறட்சி விதிமுறைகளில் திருத்தம் செய்ய கோரி மத்திய அரசுக்கு முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரு கோரமங்களா வெளிவட்டச்சாலை மேம்பால திட்டத்திற்கு ரூ.307 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது திருத்தப்பட்ட மதிப்பீடு ஆகும்.

இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.


Next Story