தகுதி தேர்வுக்கு உடலில் 5 கிலோ எடை கற்களை கட்டி வந்த 4 பேர் சிக்கினர்


தகுதி தேர்வுக்கு உடலில் 5 கிலோ எடை கற்களை கட்டி வந்த 4 பேர் சிக்கினர்
x

1,619 கண்டக்டர் பணியிடங்களுக்கு நடைபெற்ற உடல் தகுதி தேர்வின்போது உடலில் 5 கிலோ எடை கற்களை கட்டி வந்து 4 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.

கலபுரகி:-

கண்டக்டர் தேர்வில்...

கர்நாடகத்தில், கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து துறையின் கீழ் 1,619 கண்டக்டர்-டிரைவர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து அந்த இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை போக்குவரத்து துறை வெளியிட்டது. அந்த பணியிடங்களுக்காக 39 ஆயிரம் பேர் போட்டியிட்ட நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் உடல் தகுதி தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு நபர் 162 செ.மீ. உயரமும், 55 கிலோ எடையும் குறைந்தபட்சம் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. அப்போது தகுதி தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களில் சிலரது உடல் தோற்றத்திற்கும், எடைக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

5 கிலோ எடைக்கல்

இதையடுத்து அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கள் தொடைப்பகுதி மற்றும் உள்ளாடைக்குள் 5 கிலோ எடை கொண்ட எடைக்கல் மற்றும் இரும்பு சங்கிலி உள்ளிட்டவற்றை மறைத்து வைத்து கட்டி இருந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எச்சரித்து அனுப்பி வைத்தனர். போக்குவரத்து துறை தேர்வில் இதுபோன்ற நூதன முறைகேடு நடந்தது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவத்தால், தகுதி தேர்வு நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story