ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி இடைநீக்கம்
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புலிகேசிநகர்:
ரூ.10 லட்சம் லஞ்சம்
பெங்களூரு புலிகேசிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ருமன் பாஷா. அதே நிலையத்தில் லிபாக்ஷப்பா மற்றும் லட்சுமண் ஆகிய 2 பேரும் போலீஸ்காரர்களாக உள்ளனர். இந்த நிலையில் புலிகேசிநகர் ேபாலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது பெயர் கொண்டய்யா என்பதும், அவர் இரிடியம் குறித்து பலரிடம் எடுத்துரைத்து பணமோசடி செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கேட்டுள்ளனர். கொண்டய்யாவும் ரூ.10 லட்சத்தை கொடுத்துவிட்டு, வழக்குப்பதிவு ஏதும் இன்றி சுதந்திரமாக விடுவிக்கப்பட்டார்.
பணி இடைநீக்கம்
இதற்கிடையே கொண்டய்யா இதுகுறித்து கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்திரசேகரிடம் புகார் அளித்தார். அப்போது வழக்கில் இருந்து விடுவிக்க போலீஸ்காரர்கள் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறினார். இதையடுத்து சந்திரசேகர் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீதான லஞ்ச விவகாரம் உறுதியானது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரூமன் பாஷா, போலீஸ்காரர்கள் லிபாக்ஷப்பா மற்றும்
லட்சுமண் மற்றும் ஜே.சி.நகர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் கிரிஷ் ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதில் கிரிஷ் ஜே.சி.நகரில் பணிமாற்றம் பெறுவதற்கு முன்பு புலிகேசிநகர் போலீஸ் நிலையத்தில் பணி செய்து இருந்தார்.
துறை சார்ந்த விசாரணை
இதேபோல் அவர்கள் பலரிடம் லஞ்சம் பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சந்திரசேகர் ரெட்டி கூறுகையில், வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என்றார்.