4 மாநில சட்டசபை தேர்தல்; 600 எம்.எல்.ஏ.க்களை களமிறக்கிய பா.ஜ.க.
4 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்காக பா.ஜ.க. 600 எம்.எல்.ஏ.க்களை களமிறக்கி உள்ளது.
பதின்டா,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தேர்தல் பணியாற்ற அனுப்ப முடிவு செய்தது.
இதற்காக உத்தர பிரதேசத்தின் 50 எம்.எல்.ஏ.க்களும், டெல்லி, குஜராத் மற்றும் அரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் 7 நாட்களுக்கான தங்களுடைய பணியை செய்து விட்டனர். அவர்களுக்கு 65 பணிகள் கொடுக்கப்பட்டன. இவற்றில், பூத்கள், மண்டலம் மற்றும் கேந்திர மையங்களுக்கு செல்வது, தொண்டர்களுடன் கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது ஆகிய பணிகளும் அடங்கும்.
இதற்காக செயலி ஒன்றும் தயாராக உள்ளது. அதில், சேகரிக்கப்பட்ட அடிமட்ட அளவிலான தகவல்கள் அடங்கிய அறிக்கை பதிவேற்றப்படும். கட்சியின் தலைமைக்கு மாநிலங்களின் தேர்தல் நிலைமை பற்றி ஒப்படைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்காக போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வரும் பா.ஜ.க., இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600 எம்.எல்.ஏ.க்களை களமிறக்கி உள்ளது.
சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பலம் குறைந்த பூத்களில் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக அறிக்கை தயார் செய்யப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த பொறுப்பு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.