சமையல் செய்துகொண்டிருந்தபோது கியாஸ் சிலிண்டரில் தீ பிடித்து விபத்து; 4 பெண்கள் பலி
சமையல் செய்துகொண்டிருந்தபோது கியாஸ் சிலிண்டரில் தீ பிடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேசம் ஷாஜஹான்பூர் மாவட்டம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு வீட்டிற்கு இன்று உறவினர்கள் வந்துள்ளனர்.
உறவினர்களுக்கு உணவு சமைக்கும் வேலை நடைபெற்று வந்தது. வீட்டில் உள்ள சமையல் அறையில் பெண்கள் சிலர் உணவு சமைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது. தீ மளமளவென சமையல் அறை முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சமையல் அறையில் இருந்த 4 பெண்கள் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.