163 நாட்களில் முதல் முறையாக 4 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு


163 நாட்களில் முதல் முறையாக 4 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம்

163 நாட்களில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் சற்றே குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று அதிரடியாக வேகம் காட்டி 4 ஆயிரத்தை கடந்தது. 24 மணி நேரத்தில் நாட்டில் 4 ஆயிரத்து 435 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த அளவுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது 163 நாட்களில் இதுவே முதல் முறை ஆகும்.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 86 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு தினசரி பாதிப்பு விகிதம் 3.38 சதவீதமாக பதிவானது.

இதுவரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணம், 'எக்ஸ்பிபி.1.16 வைரஸ்' என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கேரளாவில் அதிக பாதிப்பு

நாட்டிலேயே கேரளாவில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதிர வைத்துள்ளது.

மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், அரியானா, கோவா, இமாசலபிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கங்களில் பதிவானது.

15 பேர் பலி

தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் நாட்டில் 2,508 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 79 ஆயிரத்து 712 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொற்றால் நேற்று முன்தினம் 9 பேர் பலியான நிலையில், நேற்று 15 பேர் இறந்துள்ளனர்.

மராட்டியத்தில் 4 பேரும், சத்தீஷ்கார், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகம், புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் தலா ஒருவரும் இறந்தனர். கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 4-ஐ கணக்கில் சேர்த்தனர். இதுவரை நாட்டில் தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 916 ஆக உயர்ந்தது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 1,912 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடெங்கும் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 91 ஆகும்.


Related Tags :
Next Story