75 டிஜிட்டல் வங்கி கிளைகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
அதன்படி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டிஜிட்டல் வங்கி அனுபவம் சென்று சேர்வதற்கு வசதியாக பல்வேறு மாவட்டங்களில் இந்த வங்கி கிளைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தில் 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன.
பிரதமர் மோடி பெருமிதம்
ஆன்லைன் மையம் போல இயங்கும் இந்த டிஜிட்டல் வங்கி கிளைகள், சேமிப்பு கணக்கு தொடங்குவது, கணக்கு இருப்பு சரிபார்ப்பு, பாஸ்புக் அச்சிடுதல், நிதி பரிமாற்றம், நிலையான வைப்பு முதலீடுகள், கடன் விண்ணப்பங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கான விண்ணப்பம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வசதிகளை வழங்கும்.
இந்த 75 வங்கிகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014-ம் ஆண்டுக்கு முந்தைய போன் பேங்கிங் முறையை டிஜிட்டல் பேங்கிங் முறைக்கு மாற்றிய பா.ஜனதா அரசின் முயற்சியால் நாடு நீடித்த வளர்ச்சிப்பாதையில் செல்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வெளிப்படைத்தன்மை
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, அதன் வங்கி அமைப்புடன் நேரடி தொடர்புடையது.
வங்கித்துறை நல்ல நிர்வாகம் மற்றும் சிறந்த சேவை வழங்குவதற்கான ஒரு ஊடகமாக மாறியுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும், பயனாளர்களுக்கான நேரடி பணப்பரிமாற்ற முறையால் முறைகேடுகள் ஒழிந்து வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது.
அந்தவகையில் பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் முறையில் இதுவரை ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு விடுவித்து உள்ளது. விவசாயிகளுக்கான பி.எம்.கிசான் திட்டத்தில் மேலும் ஒரு தவணை நிதி நாளை (இன்று) விடுவிக்கப்படும்.
வங்கி அனுபவம் மேம்படுத்தும்
டிஜிட்டல் வங்கிகளைப் பொறுத்தவரை, இவை மேலும் நிதிச் சேர்க்கை மற்றும் குடிமக்களுக்கு வங்கி அனுபவத்தை மேம்படுத்தும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அமலில் இருந்த போன் பேங்கிங் முறையில், எந்தெந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்பது குறித்து வங்கிகளுக்கு தொலைபேசியில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.