5 போலீசாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
நகை வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய 5 போலீசாரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிக்கமகளூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிக்கமகளூரு:-
நகை வியாபாரியிடம் லஞ்சம்
தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் பகவான். தங்க நகைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மே மாதம் ஹாசன் மாவட்டம் பேளூருக்கு சென்று நகைகளை வாங்கிவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா பகுதியில் வந்தபோது, 5 போலீசார் இவரது காரை வழிமறித்தனர்.
பின்னர் தங்கம் கடத்தப்படுவதாக கூறி, அவரது காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணத்தை போலீசார் கேட்டனர். அந்த ஆவணங்களை போலீசார் பார்த்துவிட்டு, போலி நகைகளை விற்பனை செய்வதாக மிரட்டியுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்ய கூடாது என்றால் ரூ.5 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று மிரட்டினர். இதற்கு பயந்த அவர் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு நகையை எடுத்து சென்றார்.
5 பேர் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து ராஜஸ்தான் சென்ற பகவான், திரும்பி சிக்கமகளூருவுக்கு வந்த பிறகு, இந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடம் புகார் அளித்தார். அந்த புகார் மனுவை வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு, இது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உயர் போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி, அஜ்ஜாம்புரா போலீஸ்காரர்கள் லிங்கராஜ், தனபால், நாயக், ஓம்கார மூர்த்தி, காந்தராஜ் ஆகிய 5 பேரும் பகவானை மிரட்டி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் 5 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
-இந்த வழக்கில் அவர்கள் 5 பேரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை எழுந்தது. இதனால் 5 போலீசாரும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிக்கமகளூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை சிக்கமகளூரு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கீதா, 5 போலீசாரின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.