இலவச பயண திட்டம் மூலம் முதல் நாளில் அரசு பஸ்களில் 5¾ லட்சம் பெண்கள் பயணம்


இலவச பயண திட்டம் மூலம் முதல் நாளில் அரசு பஸ்களில் 5¾ லட்சம் பெண்கள் பயணம்
x

இலவச பயண திட்டம் மூலம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் முதல் நாளில் 5¾ லட்சம் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர். இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1.40 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

அரசு பஸ்களில் இலவச பயணம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசின் 5 இலவச திட்டங்களில் ஒன்றான அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை பெங்களூருவில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம் 1 மணியில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு பஸ்களில் இலவச பயணம் என்பதால் மாநிலம் முழுவதும் பெண்கள் நேற்று முன்தினம் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், மாணவிகள் என அனைத்து தரப்பு பெண்களும் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்து மகிழ்ந்தனர். 2-வது நாளாக நேற்றும் பெண்கள் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

5¾ லட்சம் பெண்கள் பயணம்

இந்த நிலையில், நேற்று முன்தினம் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் ஒட்டு மொத்தமாக 5 லட்சத்து 71 ஆயிரத்து 23 பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு இருப்பதாக அரசு பஸ் போக்குவரத்து கழகங்கள் தெரிவித்துள்ளது. பெங்களூரு பி.எம்.டி.சி. பஸ்சில் மட்டும் நேற்று முன்தினம் மதியம் 1 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை 2 லட்சத்து ஆயிரத்து 215 பெண்கள் பயணம் செய்தனர்.

இதுபோல், கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்சில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 831 பெண்களும், என்.டபுள்யூ.கே.ஆர்.டி.சி. பஸ்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 354 பெண்களும், கே.கே.ஆர்.டி.சி. பஸ்களில் 53 ஆயிரத்து 623 பெண்களும் இலவச பயணம் மேற்கொண்டனர். ஒட்டுமொத்தமாக

5 லட்சத்து 71 ஆயிரத்து 23 பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொண்டதன் மூலம் 4 போக்குவரத்து கழகங்களுக்கும் ரூ.1 கோடியே 40 லட்சத்து 22 ஆயிரத்து 878 வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ்கள் வெறிச்சோடின

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் தொடங்கி உள்ளதால், அரசு பஸ்களில் பயணிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் தனியார் பஸ்கள் ெவறிச்சோடின.

பெங்களூரு, தாவணகெரே, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பஸ் நிலையங்கள் ெவறிச்சோடி கிடந்தன. இதனால் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களுக்கும் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஆட்டோ டிரைவர்களும் சவாரி கிடைக்காமல் திண்டாடினர்.


Next Story