ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் திருட்டு; நேபாளத்தை சேர்ந்த 5 பேர் கைது
பெங்களூருவில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் திருடிய நேபாளத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயநகர்:
ஓய்வு பெற்ற அதிகாரி
பெங்களூரு ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஒபேதுல்லா. இவர், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஆவார். இவரது வீட்டில் தம்பதி எனக்கூறிக் கொண்டு நேபாளத்தை சேர்ந்த பிகாஷ் மற்றும் சுப்ரீதா வேலைக்கு சேர்ந்திருந்தனர். இந்த நிலையில், ஒபேதுல்லா, அவரது குடும்பத்தினர் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் ஒபேதுல்லா வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிவிட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் ஒபேதுல்லா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட இருவரையும் தேடிவந்தனர்.
தம்பதி போல் நடித்து திருட்டு
இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஒபேதுல்லா வீட்டில் திருடியதாக பிகாஷ், சுப்ரீதா, ஹேமந்த், ரோஷன், பிரேம் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஒபேதுல்லா தனது நண்பரிடம் நேபாளத்தை சேர்ந்த தம்பதி வீட்டு வேலைக்கு தேவை என்று கூறியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட பிகாஷ், சுப்ரீதாவை தனது மனைவி எனக்கூறி வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 2 வாரமாக அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் நகை, பணம் இருக்கும் இடம் பற்றி 2 பேரும் தெரிந்து கொண்டுள்ளனர்.
ரூ.21 லட்சம் பொருட்கள்
பின்னர் கடந்த 13-ந் தேதி ஒபேதுல்லா வீட்டில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிகாஷ் திருடியது தெரியவந்தது. கைதான 5 பேரிடம் இருந்து 292 கிராம் தங்க நகைகள், 168 கிராம் வெள்ளி பொருட்கள், 18 கைக்கெடிகாரங்கள், செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும்.
கைதான 5 பேர் மீதும் ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.