மராட்டியத்தில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி 5 பெண்கள் பலி
மராட்டியத்தில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி 5 பெண்கள் பலியாகினர்.
புனே,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஷிரோலி புறநகர் பகுதியில் நடைபெற இருந்த திருமணத்தில் கேட்டரிங் வேலை செய்ய 17 பெண்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். அவர்கள் நகா்பகுதியில் உள்ள சுவார்கேட்டில் இருந்து பஸ் மூலம் ஷிரோலி பாடாவுக்கு சென்றனர். இரவு 10.45 மணியளவில் பஸ்சில் இருந்து இறங்கிய அவர்கள், புனே - நாசிக் நெடுஞ்சாலையை கடந்து திருமண மண்டபத்துக்கு செல்ல இருந்தனர்.
பெண்கள் குழுவாக சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 3 பெண்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்கள் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற டிரைவரை தேடி வருகின்றனர். சாலையை கடக்க முயன்ற 5 பெண்கள் கார் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.