விவசாயியிடம் ரூ.4 லட்சம் லஞ்சம்: வருவாய் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
விவசாயியிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை.
பெங்களூரு:
பெங்களூரு கெங்கேரி பகுதியில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனது பெயரில் உள்ள விளைநிலத்திற்கு சான்றிதழ் பெற முடிவு செய்தார். அதற்காக கெங்கேரி வருவாய் துறை அதிகாரி சுரேஷ் என்பவரை சந்தித்தார். அப்போது அவர் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.4 லட்சம் வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத விவசாயி, இதுகுறித்து அப்போது இருந்த ஊழல் தடுப்பு படையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அலுவலகத்திற்கு சென்ற விவசாயி, சுரேசிடம் ரூ.4 லட்சம் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.
அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், சுரேசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது விவசாயியிடம் சுரேஷ் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றது உறுதியானதால், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.