கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்


கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
x

ராய்ச்சூரில் அதிநவீன ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்றும், கல்யாண கர்நாடக வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பவள ஆண்டு விழா

கலபுரகி, ராய்ச்சூர் உள்ளிட்ட கல்யாண கர்நாடக மாவட்டங்கள் உருவாகி 74 ஆண்டுகள் நிறைவு பெற்று 75-வது பவள ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து, 75-வது பவள விழாவையொட்டி கல்யாண கர்நாடக மாவட்டத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் கலபுரகி டவுன் என்.வி. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது;-

அடிப்படை வசதிகள்

கல்யாண கர்நாடக வளர்ச்சியின் பொறுப்பு எங்கள் மீது இருக்கிறது. கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு பா.ஜனதா அரசு தயாராக இருக்கிறது. இதற்காக நாங்கள் நிரந்தரமாக உழைத்து கொண்டு இருக்கிறோம். மற்ற கட்சிகளை போல் வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்காமல், கல்யாண கர்நாடக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு செயல்படுத்தி வருவதுடன், மக்களுடன், மக்களாக இருந்து, அவர்களது வாழ்க்கை நிலையை அறிந்து கொள்கிறோம்.

தற்போது மாற்றத்திற்கான காலம் வந்துள்ளது. மக்கள் விழிப்படைந்துள்ளனர். கல்யாண கர்நாடக மாவட்டங்களில் அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி இங்கு வந்திருக்கும் போது ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்திருந்தேன்.

ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்

அதன்படி, அடுத்த பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் கல்யாண கர்நாடக வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். இங்குள்ள மாணவர்களுக்காக 2,100 வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு(2023) ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிவறைகள் அமைத்து கொடுக்கப்படும்.

கல்யாண கர்நாடக வளர்ச்சிக்காக அரசு கொடுத்து வரும் முக்கியத்துவத்தின் மூலம், ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சி அடைவதே நமது அரசின் நோக்கமாகும். கல்யாண கர்நாடகத்திற்கு ஒதுக்கப்படும் சிறப்பு நிதியான ரூ.1,000 கோடி மூலமாக, ஸ்ரீசக்தி அமைப்புக்கு ரூ.1½ லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதல் முறையாக பெண்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டதாகும்.

அதிநவீன ஆஸ்பத்திரி

கல்யாண கர்நாடக மாவட்டங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்க 5 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும். பீதர் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக காகினா திட்டம் விரைந்து முடிக்கப்படும். கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு பா.ஜனதா அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

கலபுரகியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த ஜவுளி பூங்கா பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும். அதுபோல், ராய்ச்சூர் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பதே, அந்த மாவட்ட மக்களின் கோரிக்கை ஆகும். எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அரசும், மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ராய்ச்சூர் மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை வசதிகள் கிடைக்க அதிநவீன வசதிகளை கொண்ட ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகம் திறப்பு

பின்னர் கலபுரகி மாவட்டம் டவுன், அணிவகுப்பு மைதானத்தில் கலபுரகி போலீஸ் கமிஷனர் அலுவலகம் ரூ.18½ கோடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. அந்த புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். அதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம் அடைந்தது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு ஹெக்டேருக்கும் ரூ.6,800-ல் இருந்து ரூ.13,600 வரை நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

நீர்ப்பாசன பகுதிகளில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படும். தோட்ட பகுதிகளில் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படும்.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்காக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story