ரெயில்வே நிலத்தை ஆக்கிரமித்து குடியேறிய சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ரெயில்வே நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் நைனிதல் மாவட்டத்தில் ஹல்துவானி என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் இந்திய ரெயில்வேக்கு சொந்தமான நிலத்தில் பொதுமக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்திய ரெயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் பல ஆண்டுகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள், இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்கள், இந்து மத வழிபாட்டு தலங்கள், வங்கிகள் என பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மொத்த மக்கள் தொகை 50 ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும்.
இப்பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வசித்து வரும் நிலையில் ரெயில்வே நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரெயில்வேக்கு சொந்தமான நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக காலி செய்து நிலத்தை ரெயில்வே மீட்டுக்கொள்ளலாம் என தீர்ப்பளித்து.
இதையடுத்து, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேறும்படி 4 ஆயிரம் குடும்பங்களுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், மக்கள் வெளியேறாத நிலையில் இந்த வழக்கு சமீபத்தில் உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் நிலம் ரெயில்வேக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்த ஐகோர்ட்டு, போலீஸ், ரிசர்வ் படையினர், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுக்கொள்ளலாம் என்று ரெயில்வேக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, வரும் 7-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்து வெளியேறும்படி குடும்பங்களுக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்துவருவதாகவும், நிலம் தங்களுக்கு சொத்தமானது சொத்துவரி உள்பட பல்வேறு ஆவணங்கள் உள்ளதாகவும் கூறி மக்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.
மேலும், ரெயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹல்துவானி ரெயில்வே ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரெயில்வே நில ஆக்கிரமிப்பில் குடியேறியுள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 50 ஆயிரம் மக்களை ஒரே இரவில் எப்படி வெளியேற்ற முடியும். அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
ரெயில்வே ஆக்கிரமிப்பு நிலத்தில் புதிதாக கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு வழக்கை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து மக்களை வெளியேற்றி நிலத்தை மீட்டுக்கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால் ஹல்துவானி பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.