உ.பி: அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிபோன 54 உயிர்கள்...அதிகாரிகள் தீவிர விசாரணை
உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் அடுத்தடுத்து 54 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்திர பிரதேச மாநிலம், பல்லியா நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளால் சுமார் 400க்கு் மேற்பட்டோர் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும், அடுத்தடுத்து 54 நோயாளிகள் உயிரிழந்தனர்.
நோயாளிகளின் உயிரிழப்பிற்கு வெப்ப அலை தான் காரணம் என மருத்துவமனை சார்பில் முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் தவறான மருத்துவ அறிக்கையை வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
வெப்ப அலையால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு நிகழ வாய்ப்பு இல்லை எனவும், அவ்வாறு அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால் அருகில் உள்ள மற்ற மருத்துவமனையிலும் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை மந்திரி பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் " உபி அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என குற்றம்சாட்டினார். கடந்த 6 ஆண்டுகளில் ஒரு அரசு மருத்துவமனையை கூட இந்த அரசு புதிதாக கட்டவில்லை என்றார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் ஏழை விவசாயிகள். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு, மருந்து மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை" எனவும் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.