கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 57 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்க்கிறது.
மண்டியா,
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு மற்றும் வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்க்கிறது. தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழைக்கு மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கன்னம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி 124.80 அடி முழு கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று இரவு நிலவரப்படி நீர்மட்டம் 124.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 46,436 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 56,174 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,282.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,655 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருமகூடலுவில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 56,974 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு சென்றது.