காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள்... நாட்டின் வருங்காலம் பொலிவடையும்: ஆனந்த் மகிந்திரா டுவிட்
காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், நாட்டின் வருங்காலம் பொலிவடையும் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சலால்-ஹைமனா பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், 59 லட்சம் டன் லித்தியம் தாது பொருட்கள் இருப்பு உள்ளது தெரிய வந்து உள்ளது. நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட இந்த தகவலை மத்திய அரசு உறுதி செய்து உள்ளது.
இந்த உலோகம் மின் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் பயன்படும். உலகில் 50 சதவீதத்திற்கு கூடுதலான லித்தியம் ஆஸ்திரேலியாவிடம் இருந்து கிடைக்க பெறுகிறது. மொத்தம் கிடைக்க கூடிய லித்தியத்தில் 18 சதவீதம் மட்டுமே பயன்பாட்டுக்கு உரியவையாக உள்ளன.
உலகில் பொலிவியா நாட்டின் சலார் டே உயுனி பகுதியில் மிக பெரிய அளவில் லித்தியம் இருப்பு அமைந்து உள்ளது. எனினும், அரசு விதிகளின்படி சுரங்கம் தோண்டுதல் அந்நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் அதிக அளவிலான லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தற்போது, சந்தேகமேயின்றி இந்தியாவின் வருங்காலம் பொலிவடையும் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.