செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூ.67 ஆயிரம் அபேஸ்


செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூ.67 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கல் சூளை உரிமையாளரிடம் இருந்து மர்ம நபர்கள் ரூ.67 ஆயிரம் அபேஸ் செய்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு பாகலூர் பகுதியில் வசித்து வருபவர் ரவி(வயது 54). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ரவியின் செல்போன் எண்ணுக்கு அழைத்து பேசிய மர்மநபர் ஒருவர், மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் என்று கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தான் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், புதிதாக வீடு கட்ட செங்கற்கள் தேவைப்படுவதாகவும் கூறினார். இதனால் ஒரு டிராக்டரில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு ரவி, ஆயுதப்படை போலீஸ்காரர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு சென்றார். அப்போது டிராக்டரை குடியிருப்புக்குள் நுழைய விடாமல் காவலாளி தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து ரவி, தன்னிடம் பேசிய ஆயுதப்படை போலீஸ்காரரை தொடர்பு கொண்டு கேட்டார்.

அப்போது அந்த நபர் ரவியின் வாட்ஸ்-அப்புக்கு க்யூ ஆர் கோடை அனுப்பி வைத்து அதன்மூலம் ரூ.67 ஆயிரம் செலுத்தும்படியும், அவ்வாறு செலுத்தினால் காவலாளி குடியிருப்புக்குள் விடுவார் என்றும் கூறினார். இதனை நம்பிய ரவியும் ரூ.67 ஆயிரத்தை செலுத்தினார். ஆனாலும் காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் அந்த நபரை ரவி தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தன்னை ஏமாற்றி ரூ.67 ஆயிரத்தை மர்மநபர் அபேஸ் செய்தது ரவிக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.


Next Story