கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் 7 சட்ட மசோதாக்கள் தாக்கல்; சபாநாயகர் காகேரி பேட்டி
பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் 7 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் காகேரி கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக பட்ஜெட்
கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடர் நாளை (இன்று) தொடங்குகிறது. இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். முதல் நாளில் கவர்னர் உரை முடிவடைந்ததும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்படும். அதன்பிறகு 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சபை மீண்டும் 13-ந்தேதி கூடும்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 4 நாட்கள் விவாதம் நடைபெறும். அதைத்தொடர்ந்து 17-ந்தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த பட்ஜெட் மீது 5 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடரில் 7 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. உறுப்பினர்களிடம் இருந்து 1,300 கேள்விகள் வந்துள்ளன.
11 நாட்கள்
இது இந்த நடப்பு ஆட்சி காலத்தின் கடைசி கூட்டத்தொடர். சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சட்டசபை ஒரு ஜனநாயக கோவில். இதில் தங்களுக்கு எத்தகைய வேலைகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டசபை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் இந்த சபையின் கண்ணியத்தை அதிகரிக்க வேண்டும்.
கட்சிகளின் சில தலைவர்களின் சுற்றுப்பயண விவரங்களை பார்க்கும்போது, இந்த முறை சட்டசபையை நடத்துவது எளிதாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடர் மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 9 நாட்கள் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் போன்றவை இடம் பெறும்.
விதிமுறைகள்
13-ந் தேதி சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. அதில் சபை எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் சட்டசபை, மேல்-சபைகளை தேர்ந்தெடுத்து விருது வழங்க நாடாளுமன்ற சபாநாயகர் முடிவு செய்துள்ளார். இதற்காக சிறந்த சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்க எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு உள்பட சில மாநிலங்களின் சபாநாயகர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். எனது தலைமையில் மூன்று கூட்டங்கள் நடைபெற்றது. இதில் மாநிலங்களின் ஆலோசனைகள் பெற்று, இறுதி அறிக்கை தயாரித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் தாக்கல் செய்துள்ளேன்.
மரியாதை நிமித்தமாக...
அவர் அந்த அறிக்கையை வெளியிடுவார். நடப்பு ஆண்டு முதலே சிறந்த சட்டசபையை தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்துமாறு கோரியுள்ளேன். நான் சமீபத்தில் டெல்லி சென்று இருந்தேன். அங்கு ஜனாதிபதி, பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது நான் சபாநாயகராக செய்த பணிகளை விவரித்தேன்.
இவ்வாறு காகேரி கூறினார்.