டிப்பர் லாரி மோதி 7 கார்கள் சேதம்
தேவனஹள்ளி அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் பி.எம்.டபிள்யூ கார் உள்பட 7 கார்கள் சேதமடைந்தன. இந்த சங்கிலி தொடர் விபத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேவனஹள்ளி:
7 கார்கள் சேதம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் ஒரு சிக்னலில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ என ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது பெங்களூருவில் இருந்து தேவனஹள்ளி நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சிக்னலில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது பயங்கரமாக மோதியது.இதில் சிக்னலில் நின்று கொண்டிருந்த 7 கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதின. இந்த விபத்தில் பி.எம்.டபிள்யூ சொகுசு கார், சான்ட்ரோ கார், எட்டியோஸ் லிவா கார், சுவிப்ட் கார் உள்பட 7 கார்கள் முன்னும், பின்னும் சேதம் அடைந்தன. லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சங்கிலி தொடர் விபத்தால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேவனஹள்ளி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் ெசய்தனர். பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சங்கிலி தொடர் விபத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ேதவனஹள்ளி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.