இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
புதுடெல்லி,
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று இந்தியாவுக்கு வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஹசீனாவுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹசீனா, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்பு, பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இருவரும் சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு முதல் சந்திப்பு நடந்து வருகிறது. இந்த சந்திப்பு 12-வது முறையாக நடக்கிறது.
இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை தலைவர்கள் மறுஆய்வு செய்ததுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் இன்று ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே இன்று தலைவர்கள் முன்னிலையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
இதன்படி, குஷியாரா ஆற்றின் நீரை திரும்ப பெறுதல், விண்வெளி தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுதல், ரெயில்வே துறை பயன்படுத்த கூடிய சரக்கு இயக்கம் போன்ற பிரிவுகளில் தகவல் தொழில்நுட்ப திட்டங்களை ஒருங்கிணைப்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வங்காளதேச ரெயில்வே அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தல், நீதிமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தல் மற்றும் பிரசார் பாரதி மற்றும் வங்காளதேச தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு இடையேயான ஒளிபரப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுதல் ஆகிய 7 பிரிவுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு உள்ளன.
இந்த சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிராக ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இருதரப்பு விவகாரங்களில் நீர், வர்த்தகம், பொருளாதார உறவுகள் மற்றும் மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
பயங்கரவாத ஒழிப்பு, எல்லை மேலாண்மை, எல்லை கடந்த குற்றங்கள் உள்ளிட்ட தளங்களில் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இரு தலைவர்களும் கோடிட்டு காட்டினர்.