துணிகர கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கைது
சோழதேவனஹள்ளியில் கட்டிட மேஸ்திரியின் வீட்டுக்குள் புகுந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழதேவனஹள்ளி,
கட்டிட மேஸ்திரி
பெங்களூரு சோழதேவனஹள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீடு தனி வீடு ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. அதாவது சம்பவத்தன்று அவர் வீட்டில் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அந்த மேஸ்திரி கதவை திறந்தார். அப்போது அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து, அவரை 8 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது. மேலும் அந்த கும்பல் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தது.
கொள்ளை
பின்னர் அவரையும், அவரது மனைவி, பிள்ளைகளையும் அந்த கும்பல் கட்டிப்போட்டது. அதையடுத்து அந்த கும்பல் வீட்டில் இருந்த பணம், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி பாதிக்கப்பட்ட கட்டிட மேஸ்திரி, சோழதேவனஹள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல ரவுடிகளான நிதின் என்கிற லோட்டே, கிஷன், சிவராஜ் என்கிற ராஜா உரூப் சிவா ஆகியோர் தலைமையிலான 8 பேர் கும்பல் என்பது தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து கொள்ளை கும்பலைச் சேர்ந்த நிதின், கிஷன், சிவராஜ் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாக உள்ளனர். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். கைதான 7 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு ரவுடிகள் நிதின், கிஷன், சிவராஜ் ஆகிய 3 பேர் தான் திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.