லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவருக்கு வலைவீச்சு


லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவருக்கு வலைவீச்சு
x

அன்னிகேரி அருகே, லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி;

வீட்டில் பதுக்கல்

தார்வார் மாவட்டம் அன்னிகேரி தாலுகாவில் கோலிவாடா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வீட்டில் பதுக்கி, வெளி மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் அன்னிகேரி போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு போலீசார் கைகாட்டினர்.

அப்போது சிறிது தூரத்திற்கு முன்னால் அந்த லாரியை நிறுத்திவிட்டு, அதில் இருந்து டிரைவர் தப்பி ஓட முயன்றார். அப்போது சுதாரித்து கொண்ட, போலீசார் டிரைவரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பியோடிவிட்டார்.

7 டன் ரேஷன் அரிசி

இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த லாரியில் சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை, மூட்டையாக 7 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட 7 டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி, லாரியில் கடத்தி சென்று வெளிமாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story