தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.8½ லட்சம் மோசடி
திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த கேரளா இளம் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பல்லாரி:-
பல்லாரி மாவட்டம் சண்டூரை சேர்ந்தவர் தேவேந்திரப்பா (வயது 40). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தேவேந்திரப்பாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தேவேந்திரப்பாவுக்கு சமூக வலைத்தளம் மூலம் கேரளாவை சேர்ந்த ஹர்ஷிதா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு பேசி வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவம் படிக்க உதவி செய்யும்படியும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தேவேந்திரப்பாவிடம் இருந்து ஹர்ஷிதா ரூ.8½ லட்சம் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் தேவேந்திரப்பாவை, ஹர்ஷிதா திருமணம் செய்ய மறுத்து விட்டார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னிடம் ரூ.8½ லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறி ஹர்ஷிதா மீது பல்லாரி சைபர் கிரைம் போலீசில் தேவேந்திரப்பா புகார் அளித்து உள்ளார்.