பெங்களூருவில் பட்டாசுகள் வெடித்ததில் 80 பேர் காயம்


பெங்களூருவில் பட்டாசுகள் வெடித்ததில் 80 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூருவில் பட்டாசுகள் வெடித்ததில் 80 பேர் படுகாயமடைந்தனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் தீபாவளி பண்டிகை கடந்த 23-ந் தேதியில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று வரை தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்த நிலையில், தீபாவளிக்கு பட்டாசுகள் வெடித்ததில் பெங்களூருவில் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பட்டாசு வெடித்து கண்களில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிண்டோ அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, அந்த ஆஸ்பத்திரியில் 27 பேர் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 7 பேர் கண்களில் பாதிப்பு ஏற்பட்டதால், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோல், நாராயணா நேத்ராலயா ஆஸ்பத்திரியில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்து காயம் அடைந்ததாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 38 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்களில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 26 பேர் என்பதும் தெரியவந்துள்ளது. சிலர் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த போது காயம் அடைந்திருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 6 பேரின் கண்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு பார்வை இழந்திருப்பதாகவும், அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் புஜலிங்க ஷெட்டி தெரிவித்துள்ளார்.


Next Story