கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு 80 சதவீத வேலைகள் ஒதுக்கீடு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு 80 சதவீத வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெருமை மிக்கவர்கள்
கர்நாடக ரக்ஷணா வேதிகே அமைப்பின் வெள்ளி விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் பெலகாவி எல்லை பிரச்சினையை மராட்டியம் அடிக்கடி எழுப்புகிறது. இந்த பிரச்சினையில் கர்நாடகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விதான சவுதாவில் பசவண்ணர் மற்றும் கெம்பேகவுடா சிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கன்னடர்களின் வரலாறு, கலாசாரம், இலக்கியம், பரம்பரையை வெளிப்படுத்துவதில் அவர்கள் இருவரும் கன்னடத்தின் பெருமை மிக்கவர்கள்.
வேலை வாய்ப்பு
கன்னடத்திற்காக வேலை வாய்ப்பு கொள்கையை உருவாக்கி தொழில் நிறுவனங்களில் 80 சதவீத வேலைகள் கன்னடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடக ரக்ஷணா வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடாவின் பயணம் அவ்வளவு சுலபமானது அல்ல. அவர் தனது பணிகளை வெற்றிகரமாக செய்து வருகிறார். கன்னடத்திற்கு ஆபத்து வரும்போது, அவர் போராடுகிறார்.
25 ஆண்டுகள் போராடி அவர் கன்னடத்தை காக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அரசுக்கு எச்சரிக்கை கொடுப்பவர்கள் இருந்தால், ஆட்சி செய்பவர்கள் விழிப்புடன் செயல்படுவார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் கர்நாடக ரக்ஷணா வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா உள்பட அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.