சட்டசபை தேர்தல்: நாகாலாந்தில் 82 சதவீதம் வாக்குப்பதிவு; மேகாலயாவில் 74 சதவீதம் ஓட்டுகள் பதிவானது
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. நாகாலாந்தில் 82 சதவீதமும், மேகாலயாவில் 74 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. எனவே இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ், போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன. இந்த பிரசாரம் 25-ந் தேதி ஓய்ந்தது.
மேகாலயா மாநிலத்தில் 21.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இங்கு ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டன.
ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) 57 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிட்டன. களத்தில் 4 பெண் வேட்பாளர்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் மேகாலயா சட்டசபையின் முதல் பெண் எம்.எல்.ஏ.வாக இருப்பார்.
தேர்தலுக்காக 3 ஆயிரத்து 419 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 640 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டிருந்தது.
நாகாலாந்தில் 13.17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் பா.ஜ.க. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜ.க. கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதுபோல காங்கிரஸ் 23 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதியிலும், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இந்தநிலையில் மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிக்கு முதலில் வந்த 5 வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இரு மாநிலங்களிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
இறுதியில் மேகாலயாவில் 82.42 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 74.32 சதவீத வாக்குகளும் பதிவானது. திரிபுராவில் கடந்த 16-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து திரிபுராவுடன், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.