இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கில் 9 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுடெல்லி,
கேரள கடற்பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகில், அந்த வழியாக சென்ற இத்தாலி கப்பலில் இருந்த அந்த நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய இந்த விவகாரத்தில் இத்தாலி அரசு ரூ.10 கோடி இழப்பீடு வழங்கியது. இதில் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 கோடியும், மீதமுள்ள ரூ.2 ேகாடி படகு உரிமையாளர் பிரெடிக்கும் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூன் 15-ந்தேதி உத்தரவிட்டது.
ஆனால் இந்த சம்பவத்தால் தங்களுக்கு ஏற்பட்ட துயருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என படகில் இருந்த மேலும் 7 மீனவர்கள் வழக்கு தொடர்ந்தனர். படகில் இருந்த மேலும் 2 மீனவர்கள் வழக்கு காலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, படகு உரிமையாளருக்கு வழங்க உத்தரவிட்ட ரூ.2 கோடியில் மேற்படி 9 மீனவர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் வழங்கவும், மீதமுள்ள ரூ.1.55 கோடியை படகு உரிமையாளருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு நேற்று தீர்ப்பை மாற்றியமைத்து வழங்கினர்.