நளின்குமார் கட்டீல் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த 9 பேர் கைது
பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு-
பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பா.ஜனதா 66 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் சபாநாயகர் காகேரி, 13 மந்திரிகள் தோல்வி அடைந்தனர். இதனால் பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஆஷா திம்மப்ப கவுடாவை, காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ராய் 4,295 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கு காரணம் பா.ஜனதாவை சேர்ந்த அருண் புட்டிலாவுக்கு டிக்கெட் கொடுக்காதது என்று கூறப்படுகிறது. இதனால் அவர் புத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
செருப்பு மாலை
அதனால் தான் ஆஷா திம்மப்ப கவுடா தோல்வி அடைந்தார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பா.ஜனதா புத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் மத்திய மந்திரி சதானந்தா கவுடா ஆகியோர் தான் காரணம் என இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும் மாநில தலைவர் மீது கோபமடைந்தனர். இந்தநிலையில் புத்தூர் பஸ் நிலையம் அருகே அதேப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் நளின்குமார் கட்டீல், சதானந்தா கவுடா ஆகியோருக்கு எதிராக பேனர் வைத்தனர். அந்த பேனரில், நளின்குமார் கட்டீல் மற்றும் சதானந்த கவுடாவின் உருவப்படம் இருந்தது. மேலும் அந்த பேனரில் பா.ஜனதா தோல்விக்கு காரணமாக உங்களுக்கு அஞ்சலி என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர நளின் குமார் கட்டீல் மற்றும் சதானந்தகவுடாவின் உருவப்படத்திற்கு செரும்பு மாலை அணிவித்திருந்தனர்.
9 பேர் கைது
இதை பார்த்த பா.ஜனதா தொண்டர்கள் சிலர், இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் செருப்பு மாலை அணிவித்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்திருந்தனர்.
இந்தநிலையில் இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த அவினாஷ், சிவராம், சைத்ரேஷ், ஈஷ்வர், நிஷான், தேக்ஷித் குருப்பிரசாத், மாதவா உள்பட 9 பேர் என்று தெரியவந்தது. மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.