விமானத்தில் கடத்திய ரூ.90 லட்சம் தங்கம் சிக்கியது
விமானத்தில் கடத்திய ரூ.90 லட்சம் தங்கம் சிக்கியது
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தனது உடைமைகளுக்குள் மறைத்து தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.63 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சவுதி அரேபியாவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தியபோது, அதில் 24 வயது வாலிபர் ஒருவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வாலிபரை பஜ்பே போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.