105 வயது விவசாயி இறந்த துக்கத்தில் மனைவி சாவு
105 வயது விவசாயி இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்தார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகா மாலகனதேவரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரா சியமாரய்யா வலசங் (வயது 105). விவசாயி. இவரது மனைவி துண்டவவ்வா (87). இந்த நிலையில் வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தேவேந்திரா நேற்று காலை திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி துண்டவவ்வா, அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். தனது கணவர் உயிரிழந்த துக்கத்தில் துண்டவவ்வா கண்ணீர்விட்டு கதறி அழுதபடி இருந்தார்.
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துண்டவவ்வா ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், கணவர் இறந்த துக்கத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறினர். கணவர் இறந்த சில நிமிடங்களிலேயே துண்டவவ்வா உயிரிழந்ததால் அவர்களது குடும்பத்தினர் துக்கத்தில் உள்ளனர். கணவர் இறந்த துக்கத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள், வாழ்க்கையில் இணைபிரியாமல் இருந்த தம்பதி சாவிலும் இணைபிரியாமல் சென்றுவிட்டதாக சோகத்துடன் தெரிவித்தனர்.