14 வயது சிறுமி கற்பழித்து கொலை
கலபுரகி அருகே, 14 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. தலைமறைவாக உள்ள மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கலபுரகி-
14 வயது சிறுமி
கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகாவை சேர்ந்தவள் 14 வயது சிறுமி. இவள் ஆலந்தா அருகே உள்ள தனது மாமாவின் வீட்டில் தங்கி இருந்து பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற சிறுமி நேற்று முன்தினம் காலை மாமா வீட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சிறுமி வீட்டில் இருந்து சென்றாள்.
ஆனால் மாலை வரை சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் மாமாவும், அத்தையும் சேர்ந்து சிறுமியை தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தின் முன்பு சிறுமியின் செருப்பு கிடந்தது. பின்னர் அந்த கரும்பு தோட்டத்திற்குள் சென்று பார்த்த போது சிறுமி அங்கு இறந்து கிடந்தாள். அவள் வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது.
கற்பழித்து கொலை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாமாவும், அத்தையும் கதறி அழுதனர். சம்பவம் பற்றி அறிந்ததும் கிராம மக்கள் அந்த கரும்பு தோட்டத்தில் கூடினர். பின்னர் அங்கு விரைந்து வந்த ஆலந்தா போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மர்மநபர்கள், சிறுமியை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் மாமா அளித்த புகாரின்பேரில் ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுரகி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.