8 மணிநேரம் இடைவிடாமல் நீந்தி கோல்டன் உலக சாதனை செய்த 15 வயது சிறுமி


8 மணிநேரம் இடைவிடாமல் நீந்தி கோல்டன் உலக சாதனை செய்த 15 வயது சிறுமி
x

சத்தீஷ்காரில் 8 மணிநேரம் இடைவிடாமல் நீந்தி 15 வயது சிறுமி கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் துர்க் மாவட்டத்தில் புராய் கிராமபகுதியை சேர்ந்த சிறுமி சந்திரகலா ஓஜா (வயது 15). 10-ம் வகுப்பு படித்து வரும் ஓஜா, தனது 5 வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மூத்த சகோதரி பூமிகா தேசிய அளவிலான ஒரு நீச்சல் வீராங்கனை ஆவார். இவரது இளைய சகோதரர் சித்தார்த் என்பவரும் மாநில அளவிலான வீரர் ஆவார். இதனால், இவரது குடும்பமே தேசிய மற்றும் மாநில அளவிலான வீரர்களாக உள்ளனர்.

ஓஜாவும், தேசிய மற்றும் மாநில ஜூனியர் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 3 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று வந்து உள்ளார். இந்த நிலையில், ஓஜா நீச்சலில் புதிய சாதனை படைக்க விரும்பினார்.

இதற்கு அவரது பயிற்சியாளர் ஓம் குமார் ஓஜாவும் உதவி செய்து உள்ளார். தனது புராய் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் சாமி கும்பிட்டபின்னர், அதிகாலை 5.10 மணியளவில் நீச்சல் செய்ய தொடங்கினார்.

அவர் 8 மணிநேரம் இடைவிடாமல் நீந்தி சாதனை படைத்து உள்ளார். இதற்காக தினசரி 10 முதல் 12 மணிநேரம் வரை அவர் பயிற்சி எடுத்து வந்து உள்ளார். ஒட்டுமொத்த கிராமமும் இதற்கு உதவி செய்தது என அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இதன்படி, சரிவிகித உணவு, தூக்கம் உள்ளிட்ட விசயங்களுடன் ஓஜாவின் உடற்பயிற்சியிலும் தனித்தனி குழுவாக பிரிந்து, அவர்கள் கவனம் செலுத்தி வந்து உள்ளனர். ஓஜாவின் இந்த சாதனை ஆனது, கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.

இந்த சாதனையை கோல்டன் உலக சாதனை புத்தகத்துக்கான ஆசிய தலைவர் டாக்டர் மணீஷ் பிஷ்னோய் உறுதி செய்து உள்ளார். இதன்பின்பு, சிறுமி ஓஜாவுக்கு மாநில உள்துறை மந்திரி தம்ராத்வாஜ் சாஹூ கோல்டன் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்கினார்.


Next Story