ஒரு கையில் பீர் பாட்டில், மறு கையில் புல்லட் வண்டி; இறுதியில் நடந்தது ...!
உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஒரு கையில் பீர் பாட்டிலுடன், மறு கையில் புல்லட் வண்டியை ஓட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
காசியாபாத்,
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து கொண்டு இருந்து உள்ளார்.
இந்நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்து உள்ளார். இதனை வேறொரு வாகனத்தில் வந்தவர் வீடியோவாக எடுத்து உள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இது போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த நபரை தேடி பிடித்து, ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து அதற்கான சலானை வழங்கி உள்ளனர்.
இதில், அந்த புல்லட் வண்டியானது அசலாத்பூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் குமாருக்கு உரியது என்பதும் வண்டியை ஓட்டியது நூர்பூரை சேர்ந்த சுரேந்திரா குமார் என்பவரின் மகன் அனுஜ் என்பதும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியதற்காகவும், ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காகவும், முன்அனுமதி இன்றி விரைவாக வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வண்டியை ஓட்டிய நபரை முசோரி போலீசார் கைது செய்துள்ளனர்.