மாடு முட்டியதில் சிறுவன் படுகாயம்
மாடு முட்டியதில் சிறுவன் படுகாயம் அடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவமொக்கா:-
சிவமொக்கா டவுன் கோபிசெட்டிகொப்பா பகுதியில் சனாத் (வயது 7) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன் நேற்று தனது சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்கு சென்றான். பின்னர், வீட்டிற்கு தனது சைக்கிளில் வந்துள்ளான். அவன் அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது திடீரென அங்கு வந்த காளை, அவனை முட்டியது. இதில் சைக்கிளில் இருந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதையடுத்து காளை மாடு, சிறுவனை தொடர்ந்து கொம்பால் தாக்கியது. இதில் சிறுவனுக்கு தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவனது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மேலும், அவர்கள் காளையை விரட்டிவிட்டு சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை மாடு முட்டிய சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.