ஒரு நாள் விளையாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றிய கல்லூரி மாணவி
மண்டியாவில் ஒரு நாள் விளையாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றிய கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிகிறது.
மண்டியா:
சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு மண்டியாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் பெண்களுக்கு பிரபலங்கள் யாராவது ஒருவர் பற்றி 30 வினாடிகளில் பேசிய வீடியோ அனுப்பி வைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்பட்டதாக சுப்ரிதா என்ற கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து மாணவி சுப்ரிதாவை பாராட்டிய இளைஞர், விளையாட்டுத் துறை உதவி இயக்குநர் ஓம் பிரகாஷ் என்பவர் ஒருநாள் விளையாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பை அளித்தார். அதன்படி ஒருநாள் விளையாட்டுத்துறை அதிகாரியாக மாணவி சுப்ரிதா பொறுப்பேற்று பணியாற்றினார். காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விளையாட்டு துறை அதிகாரியின் அலுவல் செயல்பாடுகளை கவனித்தார். விளையாட்டு துறை அலுவலகத்திற்கு சென்றபோது சுப்ரிதாவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாணவி சுப்ரிதா தான் படித்த கல்லூரிக்கு சென்றார். அவரை, ஆசிரியர்கள் வரவேற்று பாராட்டினர். ஒருநாள் விளையாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றிய கல்லூரி மாணவி சுப்ரிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.