பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது
துமகூருவில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகஇருந்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு-
துமகூரு மாவட்டம் துருவகெரே குருபரஹள்ளியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி ஆஷா. இந்த தம்பதிக்கு 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது, 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், ஆஷாவுக்கும் துருவகெரேயை சேர்ந்த வெங்கடேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருபரஹள்ளியில் உள்ள பள்ளத்தில் தலை நசுங்கியபடி ஆஷா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், ஆஷா கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலன் வெங்கடேசை கைது செய்துள்ளனர். விசாரணையில், 2 பேருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததுடன், பணம் கொடுத்தும் வாங்கி வந்தனர். அதன்படி, 3 நாட்களுக்கு முன்பு பணப்பிரச்சினை தொடர்பாக வெங்கடேசுடன் ஆஷா சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ், ஆஷாவை அடித்து உதைத்தும் தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்தது தெரியவந்தது. கைதான வெங்கடேஷ் மீது துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.