மீலாது நபியை கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு


மீலாது நபியை கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் மீலாது நபியை கொண்டாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. இதையடுத்து போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

சிவமொக்கா:-

விநாயகர் சதுர்த்தி

சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அமீர் அகமது எனப்படும் ஏ.ஏ.சர்க்கிள் உள்ளது. இந்த சர்க்கிள் அருகே முஸ்லிம்களுக்கான இடம் உள்ளது. ஆண்டு தோறும் இந்த அமீர் அகமது சர்க்கிளில் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவார்கள். அதன் பின்னர் முஸ்லிம்கள்மீலாது நபியை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த இந்து மகாசபையை சேர்ந்தவர்கள் கடந்த வியாழக்கிழமை விநாயகர் சிலை வைத்து பூஜை ெசய்தனர். பின்னர் அன்றைய தினமே அந்த சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கரைத்தனர்.

இருப்பினும் மற்ற சாமி சிலைகளை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்து மகாசபையை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு மீலாது நபியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடும்படி கேட்டு கொண்டார். அதன்படி அந்த பகுதியில் மட்டும் இன்று மீலாது நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று முஸ்லிம்கள் அறிவித்திருந்தனர்.

மீலாது நபி

இந்தநிலையில் நேற்று இரவு வரை இந்து மகாசபையினர் வைத்திருந்த சாமி சிலைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீலாது நபி பண்டிகைக்கான ஏற்பாடுகள் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதை அறிந்த முஸ்லிம்கள் அமீர் அகமது சர்க்கிளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை அகற்றும்படி இந்து மகாசபையினரிடம் கூறினர். ஆனால் அவர்கள் காலையில் தான் எடுக்க முடியும் என்று கூறினர்.

இதனால் இந்து பிரமுகர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்துக்கள் தாங்கள் வைத்த சிலையை எடுத்து விடுவதாக கூறினர்.

அமைதியாக கொண்டாடப்பட்டது

இதையடுத்து முஸ்லிம்கள் அமைதியாகினர். இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல முஸ்லிம்கள் மீலாது நபி பண்டிகையை கொண்டாடினர். அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் மீலாது நபி பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடி முடித்தனர்.


Next Story