பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் ; லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் பேட்டி


பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் ; லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் பேட்டி
x

பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எம்.எல்.ஏ.வின் பங்கு என்ன...

டெண்டர் விவகாரம் தொடர்பாக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெண்டரில் பங்கேற்கும் ஒரு ஒப்பந்ததாரரிடம் ரூ.80 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டது. அதாவது மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வழங்காமல், உங்களுக்கு வழங்குதாக ஆசை வார்த்தை கூறி ரூ.40 லட்சத்தை முதற்கட்டமாக பெறும் போது கையும், களவுமாக லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

அந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் லோக் அயுக்தா போலீசாரின் வலையில் லஞ்ச திமிங்கலங்கள் சிக்கி இருந்தார்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் அலுவலகம், அவரது மகனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒட்டு மொத்தமாக ரூ.8 கோடியே 12 லட்சம் சிக்கி இருந்தது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ.வின் பங்கு என்ன? அவருக்கு நேரிடையாக தொடர்பு இருந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நியாயமான விசாரணை

இந்த ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் லோக் அயுக்தா போலீசார் நியாயமான முறையிலும், எந்த விதமான பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்துவதுடன், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். தனிப்பட்டவர்களுக்கு என்று தனியாக சட்டத்தில் இடம் கிடையாது. ரூ.40 லட்சம் வாங்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசீலனை நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மற்ற விவகாரங்களை பகிரங்கமாக தெரிவிக்க இயலாது.

இவ்வாறு நீதிபதி பி.எஸ்.பட்டீல் கூறினார்.

பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் - லோக் அயுக்தா நீதிபதி வலியுறுத்தல்

லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் கூறுகையில், ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் பெரிய திமிங்கலங்கள் லோக் அயுக்தா வலையில் சிக்கி இருக்கிறது. லஞ்சத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால், லோக் அயுக்தாவுடன் பொதுமக்கள் கைகோர்த்து செயல்படுவது அவசியம். பட்டா உள்ளிட்டவற்றை மாற்றுவதற்கு லஞ்சம் கேட்டால், தங்களது வேலையை முடித்து கொள்ள பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க கூடாது. லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் அந்த அதிகாரிகளை லோக் அயுக்தா வலையில் சிக்க வைக்க முடியும். லஞ்ச திமிங்கலங்கள் குறித்து பொதுமக்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். லஞ்சம் கேட்பவர்கள் என்றாவது ஒரு நாள் சிக்கிவிடுவது உறுதி. அவர்கள் தப்பிக்க முடியாது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் மாநிலம் முழுவதும் லோக் அயுக்தா போலீஸ் நிலையங்கள் உள்ளன. அங்கு சென்று புகார் அளிக்கும்படி மக்களை கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

லோக் அயுக்தா போலீசார் நடத்திய பெரிய சோதனை

கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படையை ஐகோர்ட்டு உத்தரவின்படி ரத்து செய்துவிட்டு, கடந்த ஆண்டு (2022) தான் லோக் அயுக்தாவுக்கு அரசு முழு அதிகாரம் அளித்திருந்தது. கடந்த பல மாதங்களாக லோக் அயுக்தா போலீசாரின் செயல்பாடுகள் முன்பு போல் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது. இந்த நிலையில், டெண்டர் விவகாரத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர். எம்.எல்.ஏ. மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் எம்.எல்.ஏ.வின் மகன் வீடு, அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 12 லட்சம் சிக்கி இருந்தது. லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் இத்தனை கோடி ரூபாய் பணம் சிக்கி இருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் கிடைத்த பின்பு நடத்தப்பட்ட மிகப்பெரிய சோதனையும் இதுவாகும். ரூ.40 லட்சம் லஞ்ச விவகாரம் என நினைத்து சோதனை நடத்திய போலீசார், கட்டுக்கட்டாக ரூ.8 கோடி சிக்கியதால் அதிர்ச்சியும் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story