சிறுத்தை தாக்கி விவசாயி சாவு கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை


சிறுத்தை தாக்கி விவசாயி சாவு  கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஹனூர் அருகே சிறுத்தை தாக்கி விவசாயி உயிரிழந்தார். அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளேகால்:

விவசாயி

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா கே.வி.எம்.தொட்டி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தய்யா (வயது 65). விவசாயி. இந்த நிலையில் கோவிந்தய்யா நேற்று முன்தினம் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்துக்கு தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு அவர் அந்தப்பகுதியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு பாய்ந்து தாக்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தய்யா, சிறுத்தையை அங்கிருந்து விரட்டியடிக்க முயன்றார்.

சிறுத்தை தாக்கி விவசாயி சாவு

அந்த சமயத்தில் திடீரென்று அந்த சிறுத்தை கோவிந்தய்யா மீது பாய்ந்து தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் கோவிந்தய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பசுமாடும் செத்தது. இதையடுத்து அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் மாடு மேய்க்க சென்ற கோவிந்தய்யா இரவு முழுவதும் வீட்டுக்கு செல்லாததால், நேற்று காலை அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு வந்து பார்த்தனர்.

அப்போது தோட்டத்தில் கோவிந்தய்யா இறந்து கிடந்தார். மேலும் பசுமாடும் செத்து கிடந்தது. அப்போது தான் சிறுத்தை தாக்கியதில் கோவிந்தய்யாவும், பசுமாடும் செத்தது தெரியவந்தது. இதுபற்றி உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கிராம மக்கள் கோரிக்கை

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை தாக்கி தான் கோவிந்தய்யா உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கிராம மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த கோவிந்தய்யாவுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story